நாட்டின் 76வது குடியரசு தினவிழா, வரும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் புதுதில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அன்று நடைபெற உள்ளன.
இதற்காக முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளநிலை வேதியியல் இரண்டாமாண்டு மாணவி த.திரிஷா, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர், பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து தென்னிந்திய அளவில் கர்நாடகாவில் உள்ள தாவங்கரே பல்கலைக்கழகத்தில் 05.11.2024 முதல் 14.11.2024 வரை நடைபெற்ற அணிவகுப்பு தேர்வில் பங்கேற்று அதில் சிறந்த மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, தமிழ்நாடு சார்பில் 26.01.2025 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளார்.
இதன்மூலம், தமிழ்நாட்டிற்கும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கும் பெருமை சேர்த்திருக்கிற மாணவி த.திரிஷாவை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் உயர்திரு ஆர்.சுந்தர் பாராட்டி வாழ்த்தினார். இதேபோன்று ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செ.பிரகதீஸ்வரன் ஆகியோரும் பாராட்டினார்.
புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 10– வது முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.