கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான 8 ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டி, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மகளிர் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதன் விவரம் வருமாறு:

ஈரோடு விஇடி கலை அறிவியல் கல்லூரிக்கு எதிரான முதல் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி, 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் குவித்தது. மாணவிகள் ஸ்வேதா 54 ரன்களும், சந்தியா 42 ரன்களும் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து விளையாடிய ஈரோடு விஇடி கலை அறிவியல் கல்லூரி அணி, 5 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. மாணவி சந்தியா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

நிர்மலா மகளிர் கல்லூரி அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய நிர்மலா மகளிர் கல்லூரி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

3-வது போட்டியில் கோபி கலை அறிவியல் கல்லூரி அணி 5 விக்கெட் இழப்புக்கு, 25 ரன்கள் எடுத்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணியினரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு ஆர். சுந்தர் வெகுவாகப் பாராட்டினார். இதேபோல் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.