கோவையில் கடந்த 2 நாட்களாக பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பிரபல கல்லூரிகளின் அணிகளை வீழ்த்தி, நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
இப்போட்டியில் மொத்தம் 50 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்ற ராமகிருஷ்ணா கலை கல்லூரி மகளிர் அணி, சசூரி கலை அறிவியல் கல்லூரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இதன்படி, ராமகிருஷ்ணா கலை கல்லூரி அணி, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 2-0 என்ற செட் கணக்கிலும், குமரகுரு பன்முகக் கல்லூரி அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும், 3-வது லீக் போட்டியில், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி அணியை 2-1 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
பல்கலைக்கழக அளவிலான பேட்மிண்டன் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் அணியினரை, அக்கல்லூரியை நடத்தும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி வெகுவாகப் பாராட்டினர். இதேபோல் கல்லூரி முதல்வர் சிவக்குமாரும் அவர்களை வாழ்த்தினார்.
பல்கலைக்கழக மகளிர் பேட்மிண்டன் போட்டியில் 'சாம்பியன்' பட்டம் வென்றது ராமகிருஷ்ணா கலை கல்லூரி
- by CC Web Desk
- Oct 22,2024