கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (ஜூன் 24) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

அக்கூட்டத்தில் அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது. திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது என்றார்.காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ அப்படி மக்கள் உணர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதலமைச்சர் அடக்குமுறையை கையாளுகிறார் என்றார்.

கோவையில், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் கோவை மாவட்ட அதிமுக., எம்.எல்.ஏ-க்கள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.