கோவையில் வாரந்தோறும் சனி, ஞாயிறுக் கிழமைகளில் டிஎன்பிஎஸ்சி இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுவதாக மாவட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய தொகுதி II தேர்வுக்கு 534 காலிப் பணியிடங்களுக்கும் தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய தொகுதி II A தேர்வுக்கு 2006 காலிப் பணியிடங்கள் என மொத்தம் 2,540 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது 2024 செப்டம்பர் 14ம் தேதி நடந்தது.

 

இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு முதன்மைத் தேர்வானது பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

 

வாரம் இரு மாதிரித் தேர்வுகள், முந்தைய ஆண்டு வினாத்தாள் கலந்துரையாடல்களுடன் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி இம்மையத்தில் இயங்கி வருகிறது.

 

மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 81899 19755 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.

 

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.