ஒரு கிராமத்தில் வசிக்கக்கூடிய வாக்குரிமை உடைய பொதுமக்கள், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியிடம் கிராமத்தில் நடைபெறும் அரசு திட்டங்கள், கிராமத்தின் வரவு-செலவு குறித்து நேரடியாக கேள்வி கேட்கவும், கிராமத்தில் உள்ள பிரச்சனைகள், பொது தேவைகள் குறித்த கோரிக்கைகளை அரசிடம் வழங்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் கூட்டம் தான் கிராம சபை கூட்டம்.
இந்த கூட்டம், கிராம ஊராட்சி மன்ற தலைவருடன் ஊராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் நடைபெறும். இதில் அந்த ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதத்தில் மக்கள் கலந்து கொண்டு கிராம வரவு-செலவவைசரிபார்த்தல், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் போன்ற பலவற்றை குறித்து விவாதம் செய்வார்கள். மேலும் இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதி தரப்பிலிருந்து கிராமத்தில் நடைபெறும் அரசு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
கிராம சபை கூட்டம் நடைபெறும் பொது இடம் மதசார்புடைய வழிபாட்டுத் தலமாக இருக்கக் கூடாது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் தரையிலே தான் அமர வேண்டும். ஒருவேளை அரசு உயரதிகாரிகள் யாரவது கலந்து கொண்டால், அவர் எப்பேர்ப்பட்ட அதிகாரியாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் மக்களுடன் தரையில் அமர வேண்டும்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்து தலைவர், அரசு அதிகாரிகள் யாரும் நிராகரிக்க முடியாது. அதேசமயம் குறிப்பிட்ட அளவில் மக்கள் கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடிய கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்கள் செல்லாது. எனவே இதில் ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டியது மிக அவசியமானது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் நகல்களை மக்கள் கட்டணமில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இந்த தீர்மானங்களை சரி, தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டும்தான் உள்ளது.
நாளை (23.11.2024) கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்கம் [ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஜல்ஜூவன் இயக்கம் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது.
நாளை கோவையில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது! கிராம சபை கூட்டம் எப்படிப்பட்ட அதிகாரத்தை மக்களுக்கு வழங்குகிறது தெரியுமா?
- by David
- Nov 22,2024