கோவை மாநகரில் உள்ள நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்று சத்தியமங்கலம் சாலை. இதை விரிவாக்கம் செய்யவேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய ரூ.54 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக நேற்று கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

உயிர் சாலை பாதுகாப்பு ஹக்கத்தான் போட்டியின் அறிவிப்பு நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கோவை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை நவீன முறையில் சீரமைக்க ரூ.30 கோடி வழங்கியதுடன் சத்தி சாலையை விரிவாக்கம் செய்ய ரூ. 54 கோடி என மொத்தம் ரூ.84 கோடி நிதி அண்மையில் கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், கோவை மாநகரில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடிக்கு பணிகள் நடைபெற்றுவருகிறது. இது முடிந்ததும் வேறு சாலைகளை சீரமைக்க நிதி தேவைப்பட்டாலும் அதை முதலமைச்சர் கோவைக்கு வழங்க தயாராக உள்ளார் என நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி, மாவட்டத்தின் வளர்ச்சி மீது முதலமைச்சர் சிறப்பு கவனம் வைத்துள்ளார் எனவும் அமைச்சர் கூறினார்.