கடந்த மார்ச் 3ம் தேதி முன்னாள் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரும் தற்போதைய கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது.

இதில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். தமிழக பாஜக-வின் முக்கிய தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
இதில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது பேசுபொருளானது. ஆனால் அவர் கோவையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்பார் எனவும் திருமணத்திற்கு அவரின் குடும்பத்தினர் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 10) கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ,பி,சி ஆகிய மூன்று ஹால்களில் மிக பிரம்மாண்டமாக இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அவருக்கு மாபெரும் வரவேற்ப்பை கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

ஜென்னிஸ் கிளப் துவக்கத்தில் உள்ள கொடிசியா நுழைவு பகுதியில் இருந்தே பிரம்மாண்டத்தை காட்ட துவங்கியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. எடப்பாடி பழனிச்சாமியின் பிரம்மாண்ட கட் அவுட், வழி நெடுக அதிமுக கொடிகள் என மாநாடு சாயலில் நிகழ்வு ஏற்பாடு ஆகியுள்ளது.

அண்மை தகவல் படி இந்த நிகழ்வில் கட்சியினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் உள்பட மொத்தம் 1 லட்சம் பேர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 60,000+ பத்திரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 வகை உணவுகள் பரிமாறப்படும் என கூறப்படுகிறது. நட்பு ரீதியாக கட்சி சாராத பலரும் பங்கேற்க வாய்ப்புள்ளது என தெரியவருகிறது. கொடிசியா வழியே செல்பவர்கள் ஏதோ அரசியல் மாநாடு தான் நடக்கிறது போல என பார்த்து செல்கின்றனர்.