தென்னக ரெயில்வே புதிதாக 11 ரெயில்களை இயக்குவதற்கு ரெயில்வே துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் ஒரு ரெயில் கூட கோவையில் இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கோவை ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில்களை இயக்கக் கோரி 7 எம்.பி.க்கள், 6 சட்டமன்ற உறுப்பினர்கள், 190 சங்கங்கள், 20 கிராம பஞ்சாயத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டும் தென்னக ரெயில்வே, பாலக்காடு கோட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு க்கள் அளிக்கப்பட்டன.

மேலும் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவரிடமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் அந்த கோரிக்கைகள் எதையும் ஏற்காமல் தென்னக ரெயில்வே புதிதாக 11 ரெயில்களை இயக்க ரெயில்வே துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதில் 8 ரெயில்கள் கேரளாவிலிலும், 3 ரெயில்கள் தமிழகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கோவை பகுதியில் ஒரு ரெயிலை கூட இயக்க அனுமதிக்கப்படவில்லை. இது தென்னக ரெயில்வே தொடர்ந்து கோவையை வஞ்சிக்கும் செயலாகும்.

இதற்கு ஒரே தீர்வு கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வரை உள்ள பகுதியை பாலக்காடு கோட்டத்திலிருந்து சேலம் கோட்டத்துக்கோ அல்லது மதுரை கோட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்பது தான். சேலம் கோட்டமோ, மதுரை கோட்டமோ பொள்ளாச்சி வழியாக புதிதாக ரெயிலை இயக்க வேண்டுமென்றால் பாலக்காடு ரெயில்வே கோட்டத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் தான் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் தென்னக ரெயில்வே தொடர்ந்து கோவையை புறக்கணித்து வருகிறது.

தென்னக ரெயில்வேயில் அதிக வருவாயை ஈட்டித்தரும் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு ரெயில் கூட இயக்க அனுமதிக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது. கோவை&பொள்ளாச்சி மார்க்கத்தில் ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த ரயில்களைத் தான் மீண்டும் இயக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.

அதிலும் குறிப்பாக கீழ்க்கண்ட 5 ரெயில்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்:

திருச்செந்தூர் ரயிலை பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும். பழனி வழியாக மதுரை&கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸை உடனடியாக விட வேண்டும்.

ராமேசுவரத்தில் இருந்து மதுரை மற்றும் பழனி வழியாக கோவைக்கு இயக்கப்பட்டு வந்த ரயிலை இரவு நேர எக்ஸ்பிரசாக மீண்டும் இயக்க வேண்டும். நெல்லையிலிருந்து தென்காசி மற்றும் கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை ஓடிக் கொண்டிருக்கும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.