முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

காலை 6:30 மணிக்கு கோ பூஜை உடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மூலவரிடம் சண்முகார்ச்சனை நிகழ்ச்சியும் 11 மணிக்கு உற்சவரிடம் சண்முகார்ச்சனையும் நடக்கிறது. பிற்பகல் 3 மணி அளவில் அன்னையிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வர உள்ளனர். இது தவிர கார் இரு சக்கர வாகனங்களிலும் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தர உள்ளனர்.

நாளை அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் அறங்காவலர் குழு மற்றும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது. சூரசமஹாரத்தை ஒட்டி நாளை மலைக்கோவிலுக்கு செல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கான அனுமதி இல்லை.இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம். இது தவிர படிக்கட்டுகள் வழியாகவும் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.