சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாக பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் அவருக்கும் அதனை ஆதரித்து பேசிய பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கோமியம் அனுப்பும் போராட்டத்தை திராவிடர் தமிழர் கட்சியினர் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொண்டனர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு தபால் மூலம் கோமியத்தை அனுப்பினர்.

அப்பொழுது தபால் அலுவலக ஊழியர்கள் கிருமித் தொற்று பரவுவது போன்ற பொருட்களை அனுப்ப இயலாது என்று கூறியதால் உயர் அதிகாரிகளிடம் பேசி பதிலளிக்குமாறு கூறி திராவிடர் தமிழர் கட்சியினர் தபால் அலுவலகத்திற்குள் சிறிது நேரம் காத்திருந்தனர். பின்னர் உயர் அதிகாரியின் அறிவுரையின் பேரில் கூடுதல் பாதுகாப்புடன் பேக்கிங் செய்யப்பட்டு கோமியம் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதேபோன்று திராவிடர் தமிழர் கட்சியின் மகளிர் அணியினர் தென் மாவட்டங்களில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசனுக்கு கோமியத்தை அனுப்ப உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதித்தமிழன் தெரிவித்தார்.