கோவையில்  கிராவல் மண் கடத்தல் சம்பவங்கள் சமீபமாக அதிகம் நடைபெற்றுவருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கோவை அன்னூரில் கிராவல் மண் கொள்ளை சம்பவம் குறித்து ட்ரோன் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது.  ஆத்திகுட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள நிலங்களில், மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதாகவும், குறிப்பாக மணல் திருட்டு நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துவருகிறது.

தனியார் மற்றும் அரசு நிலங்களில் கனரக இயந்திரங்கள் மூலமாக மணல் எடுக்கப்பட்டு டிப்பர் லாரிகளில் பார்சல் ஆகிறது என செய்திகள் ஆதாரத்துடன் வெளிவந்தன. கிராவல் மண் திருட்டை அதிகாரிகள் தடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்,' என அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதும் கவனம் பெற்றது.

இந்நிலையில் நேற்று கோவையில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த லாரியை வருவாய் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கடத்தப்பட்ட கிராவல் மண்ணை பறிமுதல் செய்து உள்ளனர்.

கோவை கலெக்டர் அலுவலக சிறப்பு வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று துடியலூர் - பன்னிமடை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனிகவுண்டன் புதூர் அருகே வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து விஜயகுமார் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக போலீசார் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி, 3 யூனிட் கிராவல் மண்ணை பறிமுதல் செய்தனர். 

மணல் கடத்தலில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த சாலமோன் ராஜ்(36) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி மணல் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Photo: Representational