கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் மாதத்தில் மட்டும் 570 வழக்குகள் சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றது. நடப்பு ஆண்டில் கடந்த மே 31ம் தேதி வரை ஐந்து மாதங்களில் 49,912 சைபர் வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் நிதி இழப்பு தொடர்பாக 38,203 வழக்குகளும், 11,709 நிதி சாரா சைபர் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பாக 2,147 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

கோவையில் இத்தகைய சைபர் குற்றங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. நாள்தோறும், ஏராளமான புகார்கள் மாநகர சைபர் கிரைமில் குவிந்து வருகிறது.

இதனிடையே ஜூன் மாதத்தில் மட்டும்  570 புகார்கள் கோவை மாநகர சைபர் கிரைமுக்கு வந்துள்ளது. சைபர் குற்றப்பிரிவு பிரிவு போலீசார் இதுதொடர்பாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வெவ்வேறு மாதங்களில் பெற்றப்பட்ட புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.1.5 கோடி பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்துள்ளது கோவை சைபர் கிரைம் போலீஸ்.

ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடைபெற்று வருவதால் இந்த விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.