4 ஆண்டுகளில் கோவையில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்த ஃபவுண்டரி நிறுவனங்கள்!
- by David
- Feb 19,2025
ஃபவுண்டரி என்றழைக்கப்படும் வார்ப்பட தொழிற்சாலைகள் கோவையில் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் கோவையில் இயங்கி வந்த 400 சிறு, குறு பவுண்டரி நிறுவனங்கள் 250 ஆக குறைந்துள்ளன என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மோட்டார் பம்ப் உற்பத்தியில் பல காலமாக முதலிடத்தில் இருந்த கோவை, சமீபகாலமாக அந்த இடத்தை தக்கவைக்க சில காரணங்களால் சிரமப்பட்டுவருகிறது.
பம்ப்செட்டுகளுக்கு அதிக ஜி.எஸ்.டி., பம்ப் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்காமல் போதல், பிற மாநிலத்தில் உள்ள பம்ப்செட் உற்பத்தியாளர்களுக்கு அந்தந்த அரசுகள் வழங்கும் பல்வேறு ஊக்கத்தொகைகள், தமிழகத்தில் தொழித்துறையினர் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டண உயர்வு என இது போன்ற சில காரணங்களால் கோவையில் இயங்கும் பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் பிற மாநில பம்ப்செட் உற்பத்தியாளர்களுடன் போட்டியிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக மூலப்பொருள் விலை உயர்வால் பம்ப் செட், கிரைண்டர் தொழில்கள் இடம்பெயர்ந்து குஜராத் போன்ற வட மாநிலங்கள் நோக்கி செல்வதாக தகவல் உள்ளது. இந்நிலையில், கோவையில் தொடர்ந்து இயங்கும் பம்ப் நிறுவனங்கள் பலவும் அவர்களுக்கு தேவையான உதிரிபாகங்களை உள்ளூர் நிறுவனங்களிடம் பெறுவதை விட குஜராத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றனராம்.
இதனால் உள்ளூரில் இந்த உதிரிபாகங்களை செய்து கொடுத்து கொண்டிருக்க கூடிய சிறு ஃபவுண்டரி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்படியே சென்று கொண்டிருந்தால் பம்ப்செட் உற்பத்தி மற்றும் அது சார்ந்துள்ள பிற தொழில்கள் கோவையில் மறைய துவங்குமோ என்று அஞ்சுகின்றனர் சிறு குறு தொழில் நிறுவனத்தினர்.
கோவையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபவுண்டரி நிறுவனங்கள் மொத்தம் 600 இருந்தது. இவற்றில் 400 சிறு, குறு ஃபவுண்டரி நிறுவனங்களும், 150 நடுத்தர ஃபவுண்டரி நிறுவனங்களும், 50 பெரும் ஃபவுண்டரி நிறுவனங்களும் அடங்கும். இதில் 400 ஆக இருந்த சிறு குறு ஃபவுண்டரி நிறுவனங்கள் 250 ஆக கடந்த 4 ஆண்டுகளில் குறைந்துள்ளன. பிற மாநிலங்களில் உள்ள பவுண்டரி நிறுவனங்களுடன் போட்டியிடமுடியாத நிலை உள்ளதாக ஃபவுண்டரி உரிமையாளர்கள்.
உள்ளூர் பம்ப் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களுக்கான உதிரி பாகங்களை இங்குள்ள சிறு ஃபவுண்டரி நிறுவனங்களிடம் கேட்கும் விலையில் அவர்களால் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. ஏனென்றால், இந்த உதிரிபாகங்களுக்கான மூலப்பொருட்கள் எல்லாமே வட மாநிலங்களில் இருந்து தான் வருகிறதாம். எனவே அதை அங்கிருந்து அதிக விலை கொடுத்து வாங்கி இங்கு உதிரிபாகங்களாக செய்து, அதை பம்ப் உற்பத்தி நிறுவனங்களிடம் அவர்கள் கேட்கும் விலையில் கொடுக்க முடிவதில்லை. ஆனால் அதை குறைந்த விலையில் கொடுக்க வடமாநில நிறுவனங்களால் முடிகிறது.
மேலும் உள்ளூர் தொழிலாளர்கள் பவுண்டரி தொழிலில் அதிகமாக ஈடுபடாததால் ஜார்க்கண்ட், உத்தர பிரதேஷ், பீகார் போன்ற வட மாநில தொழிலாளர்களையே உள்ளூர் நிறுவனங்கள் அதிகம் நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. குஜராத், உத்தர பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தத்துறையில் வளர்ச்சி அடைந்து வருவதால் அங்கிருந்து இங்கு வருபவர்கள் வரவு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர் கோவையை சேர்ந்த சிறு குறு தொழில் நிறுவனத்தினர்.