கோடை 2025: கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
- by David
- Mar 12,2025
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் வெப்பம் இயல்பை விட குறைவாக காணப்படும் எனவும் நாளை (13.3.25 முதல் 15.3.25) வரை வெப்பம் 2-3 டிகிரி அதிகமாக வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணனும் கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்று மாலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று எங்கு அதிகபட்ச மழை தெரியுமா?
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கோடை காலத்தின் முதல் மழை நேற்று சக்கைபோடு போட்டது. நேற்று மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவை ஒன்றாக கணக்கிட்டால் அது 195.70 மில்லி மீட்டராக உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தெரியவருகிறது.
இதில் அதிகபட்சமாக சூலூரில் 30.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து பீளமேடு-விமான நிலைய பகுதியில் 29.90 மில்லி, வேளாண் பல்கலை கழக பகுதிகளில் 22 மில்லி, மேட்டுப்பாளையம் மற்றும் கோவை தெற்கு தாலுக்கா பகுதிகளில் தலா 19 மில்லி மற்றும் போத்தனூர் ரயில் நிலைய பகுதியில் 17.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த 6 இடங்களே அதிகபட்ச மழையை பெற்ற இடங்களாக உள்ளது.