தமிழகம் தேசிய அளவில் ஜவுளி துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கக்கூடிய ஒரு மாநிலமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில் இந்த துறை சார்ந்த நாடா இல்லா தறி நெசவாளர்கள் தற்போது தங்கள் எதிர்கொள்ளும் கூலி தொடர்பான பிரச்சனையால் உற்பத்தியை அடுத்த ஆண்டு பொங்கல் காலம் முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
எதனால் இந்த சிக்கல்?
கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாடா இல்லா தறிகள் அதிக அளவில் இயக்கப்பட்டுவருகின்றன. தினமும் இங்கிருந்து 10 லட்சம் மீட்டர் காடா துணிகள் தயாராகிறது. இவற்றின் மதிப்பு ரூ.4 கோடி.
இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு வழங்கும் கூலியை குறைந்துள்ளதாக கூறும் நாடா இல்லா தறி நெசவாளர்கள், இந்த நிலைமை தொடர்ந்தால் துணி உற்பத்தி பாதிக்கப்படும், அதனால் ஜவுளி உற்பத்தி சார்ந்த அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என கூறுகின்றனர்.
இப்படியிருக்க, தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கம், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி தராவிட்டால் 2025 ஜனவரி 15ம் தேதி முதல் திருப்பூர், கோவை மாவட்டம் முழுவதும் நாடா இல்லாத தறிகள் உற்பத்தியை முழுமையாக நிறுத்தும் என அறிவித்துள்ளது.
2025 பொங்கல் முதல் உற்பத்தியை நிறுத்த நாடா இல்லா தறி நெசவாளர்கள் முடிவு!
- by CC Web Desk
- Nov 29,2024