கோவையை தலைமயிடமாக கொண்டு இயற்கை பராமரிப்பு பணிகளை கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் செய்துவரும் சிறுதுளி அமைப்பின் 21 ஆவது ஆண்டு விழா மற்றும் 'துளி துளியாய் சிறுதுளியாய் ' எனும் 75 நாள் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வின் நிறைவு விழா இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் தொழில்துறை அமைச்சர் TRB ராஜா கலந்து கொண்டனர். சிறுதுளியின் தலைவர் SV பாலசுப்ரமணியம், நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் வெவ்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

2003 முதல் 2024 வரையில் சிறுதுளி இந்த 21 ஆண்டுகளாக 114 திட்டங்கள் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது, 903 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மூலம் 12,000+ மில்லியன் லிட்டர் நீரை நிலத்திற்குள் சென்று சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

சிறுதுளி அமைப்பின் தலைவர் SV பாலசுப்ரமணியம் பேசுகையில் இந்த அமைப்பு மூலமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பராமரிப்பு பணிகள் பற்றி சுருக்கமாக கூறி, கோவையின் சுற்றுச்சூழல் சம்மந்தமான 3 கோரிக்கைகளை முன்வைத்தார்.

நொய்யல் நதியின் தென் பகுதியில் இருந்து 22 ஓடைகளும், வடக்கு பகுதியில் இருந்து 12 ஓடைகளும் மூடியுள்ளது. இதில் 2 ஓடைகள் சிறுதுளி தரப்பில் சீரமைத்துள்ளது. மீதம் உள்ள 32 ஓடைகளை அரசு சீரமைத்து தரவேண்டும் எனவும் UGD மூலமாக கழிவு நீர் நொய்யல் உள்ளிட்ட வெவ்வேறு நீர் நிலைகளில் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

திட கழிவுகளை ஜெர்மனியில் எரித்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர், அதன் பின் மிஞ்சும் கழிவுகளை கொண்டு செங்கல் தயாரிக்கின்றனர். இதுபோல கோவையில் உள்ள திட கழிவுகளை கையாள ஒரு சிறப்பு திட்டம் கொண்டுவரவேண்டும். அந்த மாதிரி திட்டத்தை கோவைக்கு கொண்டுவர வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என கேட்டுகொண்டார்.

இதற்கு அடுத்து பேசிய அமைச்சர் முத்துசாமி, "நீங்கள் எதிர்பார்ப்பதை கண்டிப்பாக செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம்," என்றார். பொது பணி செய்யும் அமைப்புகளுடன் இணைந்து பணி செய்ய தயார் எனவும், அமைச்சர்கள் ராஜா, சுவாமிநாதன் மற்றும் தன்னை கோவையின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி கொள்ளுங்கள் எனவும் கேட்டுகொண்டார். 

நிகழ்வில் பேசிய சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், அமைச்சர்கள் முன்னர் சில கோரிக்கைகளை வைத்தார்.

மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை அனைவருக்கும் (அனைத்து கட்டிடங்களிலும்) கட்டாயம் ஆக்கிட வேண்டும், கோவை மாநகராட்சி எல்லையில் செயலாற்று உள்ள ஆழ்துளை கிணறுகளை நீர் சேமிக்க செய்யக்கூடியதாக மாற்றிட முயற்சிகள் எடுக்கவேண்டும் என கேட்டுகொண்டார்.

கோவையில் வாழும் நபர் ஒருவருக்கு 1 மரம் என மக்கள் தொகை அடிப்படையில் 25 லட்சம் பேருக்கு மரக்கன்றுகள் நடவேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து அதை நிறைவேற முயற்சிகள் எடுத்து இதுவரை சிறுதுளி சார்பில் 8 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து உள்ளோம். இதற்கு மேல் நடவு செய்ய நிலம் கூடுதலாக தேவைப்படுவதால், HREC துறையின் கீழ் காலியாக உள்ள நிலங்களில் சிலவற்றை மரங்கள் நட வழங்கவேண்டும், நொய்யலின் ஓடைகளை சீரமைக்கவும், அதில் கழிவு நீர் கலக்காமலும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

அவருக்கு அடுத்து பேசிய அமைச்சர் சுவாமிநாதன், மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய நீர் நிலைகளை மத்திய, மாநில அரசு இணைந்து மேம்படுத்த உள்ளது எனவும், நொய்யல், பவானி, அமராவதி போன்ற நதிகள் மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு நீர் மேலாண்மை குறித்த திட்டங்கள் அடங்கிய முன்மொழிவு அரசின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நொய்யல் நதி அதை ஒட்டியுள்ள நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்திட ரூ.1600+ கோடிக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நொய்யல் குறித்த வேண்டுகோள்களை அரசு நிறைவேற்றும் என்றார்.

இந்த நிகழ்வின் மற்றொரு பகுதியாக கோவையில் செயல்படும் ஐந்து பெரும் கட்டுமான தொழில்துறை சார்ந்த சங்கங்கள் ( CREDAI, BAI, ACCE, COAREA, CEBACA) சிறுதுளியுடன் இணைந்து கோவையில் வெவ்வேறு இடங்களில் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை கட்ட கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர்கள் நிலையில் பரிமாறிக் கொண்டனர்.