கோவை மருதமலை கோயில் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் மலையின் அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் 1 நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த வேலை திருடியது அவர் தான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

என்ன நடந்தது?

 

மருதமலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான வேல்கோட்டம் தியான மண்டபத்தில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

 

இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 ½ அடி வெள்ளியால் செய்யப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான வேலினை கடந்த 2ம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில் அங்கு சாமியார் வேடத்தில் வந்த ஒரு நபர் திருடி சென்றார்.

 

அதன் காட்சிகள் சிசிடிவி கேமராவில்  பதிவானது. இதையடுத்து வடவள்ளி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

 

இந்நிலையில் சாமியார் வேடத்தில் வந்து திருடிய சம்பவத்தில் வெங்கடேஷ் (57) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

முன்னதாக இந்த மண்டபம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சம்பந்தப்பட்டது என்று கருதப்பட்ட நிலையில், கும்பாபிஷேகத்துக்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பை மீறி எப்படி அங்கு திருட்டு நடைபெற்றிருக்கும் என பேச்சுக்கள் வேகமாக எழுந்தன. இதையடுத்து அந்த கோயில் தனியாருக்கு சொந்தமானது என்று அரசு தரப்பில் உடனே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.