கோவைல கடை வெச்சா மறக்காம தமிழிலும் பெயர் பலகை வையுங்க!
- by CC Web Desk
- Jan 09,2025
கோவையில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் மீதும், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வழங்காத நிறுவனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த விவரம் பின்வருமாறு:-
கோவையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் சட்டமுறை எடையளவு சட்டங்கள் கீழ் சிறப்பு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 24 நிறுவனங்களின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தினர் ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்றுகொண்டே பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தபோது 12 நிறுவனங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை என்பதை உறுதி ஆனது. இதையடுத்து இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களும் 'அரசாணை எண் 1541'ன் படி தமிழில் முதலிலும், பிறகு ஆங்கிலம், அவரவர் விரும்பும் பிற மொழிகள் என 5 :3: 2 என்ற விகிதாசாரப்படி பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்ட வேண்டும் என்பது விதி.
எடை குறைவு, முத்திரை / மறுமுத்திரை இடப்படாத எடை அளவுகள், வைத்திருத்தல் தொடர்பாக 45 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக 91 நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத்தில் மட்டும் தொழிலாளர் துறை மொத்தம் 143 நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.