தி.மு.க விற்கு எதிரான வாக்குகளை ஒன்றினைக் வேண்டும் என அ.தி.மு.க. பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது வரவேற்க தக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

"இதில் முதன்மையான பங்காக என்னுடையது இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள். நான் மட்டும் தனியாக நிற்பேன். நான் மட்டும் தான் உருப்படியாக நிற்கிறேன்,"  என அவர் கூறினார்.

கோவையில் நடைபெறும் நா.த.க.வின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான S.P. வேலுமணியின் இல்ல வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள அவர் இன்று கோவை வந்தார். 

இந்நிலையில் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக ஏதாவது தாக்கத்தை உண்டாக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் ஒரு பண்பாட்டு ரீதியாக ஒரு குடும்ப நிகழ்வுக்கு செல்கிறேன். இது அரசியல் பேசுவதற்கான இடம் கிடையாது," என கூறினார்.

அரசியலில் கொள்கை கோட்பாடு போன்றவை எல்லாம் மாறலாம். ஆனால் மனித உறவு மாறாது. உறவிற்காக நான் விழாவிற்கு செல்கிறேன் என்று கூறினார். 

கூட்டணி குறித்த அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, எங்கு நின்றாலும் நான் தனித்து நிற்பேன் எனக் கூறிய அவர், "கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்கிறீர்கள், கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என யாரையும் கேட்பதில்லை. கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வென்று விடலாம் என்ற நிலையை வரவேற்கிறீர்களா ? என்று கூறினார்.