கோவையில் வெடிகுண்டு வெடிப்பு தினம் மற்றும் காதலர் தினத்தை யொட்டி இன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி குண்டு வெடித்தது. 

 

இதில், 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டு சம்பவத் தால் கோவையில் பதட்டமான சூழல் உருவானது. 

 

இதைத்தொடர்ந்து, பல்வேறு கால கட்டங்களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இன்று கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம் என்பதால் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், அஞ்சலி கூட்டம் நடத்துவார்கள்.

 

இது தவிர, இன்று காதலர் தினம் என்பதால், உக்கடம் குளம், வாலாங்குளம், குறிச்சி குளம், ரேஸ்கோர்ஸ், வ.உ.சி பூங்கா, மருதமலை உள்ளிட்ட இடங்களில் காதலர்கள் குவிவார்கள். 

 

மேலும், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் சர்ச்சையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

 

மேலும், குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை நகரில் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்நிலையில், கோவை வெடிகுண்டு வெடிப்பு தினம் மற்றும் காதலர் தினத்தை யொட்டி நகரில் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், டி.எஸ். பிக்கள், கமாண்டோ போலீசார், அதிவிரைவுப்படை போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

போலீசார், லாட்ஜ், ஓட்டல்கள், பொதுஇடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலை யம், மார்க்கெட், சினிமா தியேட்டர்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். முக்கிய இடங்களில் தற்காலிக செக்போஸ்ட்கள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

 

மேலும், 400க்கும் மேற்பட்ட சென்சிடிவ் ஏரியாக்களில் போலீசார் ஜீப், பைக் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதட்டமான பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆட்சேபகரமான செயல்களில் ஈடுபடக்கூடாது.

 

 போலீஸ் அனுமதியின்றி போஸ்டர், பேனர் வைக்க கூடாது. சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துக் களை பதிவிடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

சைபர் கிரைம் போலீசார் மூலமாக தடை செய்யப்பட்ட அமைப்புகள், பல்வேறு கால கட்டடங்களில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டவர்கள், தடை செய் யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காதலர் தினத்தில் காதலர்கள் அதிகம் கூடும் பூங்காக்கள், தியேட் டர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

பொது இடங்களில் சுற்றும் காதலர்களை பிடித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. திருமணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களையும் போலீசார் கண்காணிக்க உள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

பாதுகாப்பான, அமைதியான முறையில் காதலர் தினம் மற்றும் கோவை குண் டுவெடிப்பு தினம் கடைபிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.