விசைதறி வேலை நிறுத்தம் காரணமாக ஓ.இ. நூற்பாலைகள் நஷ்டம் அடைந்து வருகிறது என்பதால்  விசைதறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டி கோவை கலெக்டரிடம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் சார்பில் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெயபால் மற்றும் நூற்பாலை  நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜாப் ஒர்க் செய்து தருபவர்களுக்கு இடையே விலை பேசியே பெரும்பாலும் தொழில் நடந்து வருகின்றது.

காடா உற்பத்தி செய்து வரும் கோவை திருப்பூர் மாவட்ட விசைதறியாளர்கள் இடையே மட்டும் ஜாப் ஒர்க் கட்டணம் தொடர்பாக கடந்த கால் நூற்றாண்டுகாலமாகவே அரசு தலையிட்டே சமரசம் செய்யும் நிலை உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

2022 ஒப்பந்த கூலியிலிருந்து அவர்களுக்கு கூலி உயர்வு வேண்டுமென்று கோரிக்கை விடுதிருப்பதாகவும், அது கிடைக்கும் வரை உற்பத்தி நிறுத்தம் அறிவித்திருப்பதினால் இந்த பகுதிக்கு நூல் விற்பனை செய்து வந்த நூற்பாலைகள் கடும் இன்னல்களையும் பொருளாதார நஷ்டத்தையும் சந்தித்து வருவதாக கூறினர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த நிலை அவ்வப்போது தொடருவதினால் மற்ற பகுதிகளிலும் எதிரொலிப்பதினால் மாநில முழுவதிலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு நூற்பாலைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றது.


"நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தும், விற்பனை சரிவினால் பணபுழக்கம் குறைந்து வருவதினால் வங்கிகளுக்கு கடன் திருப்பி செலுத்தவும், மின்கட்டணம் செலுத்தவும், சப்ளையர்களுக்கு வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க இயலாமல் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம்," என கூறிய அவர்கள், நூற்பாலை  இயங்கினாலும் இயங்காவிட்டாலும் LTCT மின்கட்டணம் 17950 ரூபாயும் HT. நுகர்வோர்கள் 2 லட்சம் முதல் 4.5  லட்சம் ரூபாய்  வரை வாங்கிய டிமாண்ட் சார்ஜ் செலுத்த வேண்டும் என தங்கள் நிலையை விளக்கினார்.

எனவே ஸ்ட்ரைக் முடியும் வரை இதை ரத்து செய்து, மறுகட்டணம் மற்றும் வணிக வரி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

"மதிப்புகுரிய மாவட்ட ஆட்சியர் எங்கள் நிலை உணர்ந்து விசைதறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்படுத்தி ஸ்ட்ரைக் முடிவுக்கு கொண்டு வர வேண்டுகின்றோம்," என இந்த கூட்டமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.