துணை முதலமைச்சர் தலைமையில் கோவை கிரிக்கெட் மைதான திட்டம் குறித்து ஆய்வு!
- by David
- Apr 07,2025
கோவையில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் கட்ட தமிழக அரசு சார்பில் ஒண்டிப்புதூரில் 30 ஏக்கர் நிலம் தேர்வாகி உள்ளது.
தமிழக துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டம் மேல் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
மைதானம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் துவங்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report)வடிவமைப்பு திட்டமும் இறுதி நிலையில் உள்ளது.
இந்த மைதானத்தை சிறப்பானதாக முன்னெடுத்துச்செல்ல என்ன வசதிகள் இருக்கவேண்டும், எதெல்லாம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை அரசுக்கு கருத்தாக தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்து மக்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இந்த கிரிக்கெட் மைதானத்தின் வடிமைப்பு, மைதானத்தில் பார்வையாளர்கள், பல்வேறு வளாகங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை எந்தளவு சரிவர உள்ளடக்க முடியும் என்பது குறித்த திட்டமிடல் மற்றும் இந்த மைதானத்தை இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெரும் நிகழ்வுகள் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றது போல அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இக்கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் அசோக் சிகாமணி மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.