வரும் திங்கள் (30.12.24) நடைபெறவுள்ள கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அனுமதி கேட்டு மாமன்றத்தின் முன்னர் கோரிக்கை வைக்கப்படவுள்ளது. 

இதில் கோவை வெள்ளலூர் பகுதியில் கட்டப்பட்டு பாதியில் நிற்கும் பேருந்து நிலைய கட்டிடத்தை மொத்த காய்கறி, பழ அங்காடி (Wholesale Vegetable &Fruit Market) ஆகவும், கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான அலுவலக கட்டிடமாகவும் மாற்றியமைக்க அனுமதி கோர படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்திற்கு வெள்ளலூர் பகுதி மக்கள் கண்டனத்தை தெரிவித்து,  தங்களிடம் அரசு அதிகாரிகள் எந்தவித கருத்தும் கேட்காமல் இப்படி திடீரென ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்த இடத்தை மாற்றியமைக்க திட்டமிடுவது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.

ரூ.50 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டு 40% நிறைவடைந்து பாதியில் நிற்கும்  இந்த வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் மீண்டும் துவங்கப்பட வேண்டும் என வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு அப்பகுதி மக்கள் சார்பில் போராடி வருகின்றனர்.

பேருந்து நிலையம் அமைந்தால் அதனால் அங்கு வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்த்து மக்கள் காத்துவருகின்றனர். இதற்காக சட்டமன்றத்தில் கோவையை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் கோரிக்கையை ஏற்று அரசிடம் அந்த பேருந்து நிலைய பணியை மீண்டும் துவங்குவது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

எப்படியாவது ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைந்தால், அது இப்பகுதிக்கு வளர்ச்சியை கொண்டுவரும் என மக்கள் நம்பிக்கையாக உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி இப்படி ஒரு திட்டத்தை கொண்டுவர உள்ளது அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதனால் மாநகராட்சி திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது?

கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையம் எதிரே ஒரு காய்கறி மார்க்கெட் உள்ளது. இதை தவிர மாநகரின் பிரதான பகுதிகளில் TK மார்க்கெட், உக்கடம் ராமர் கோவில் மார்க்கெட் என 3 மொத்தவிலை காய்கறி மார்க்கெட் உள்ளன. மாநகரில் இந்த மார்க்கெட்கள் அமைந்துள்ளதால் இவையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என தகவல் உள்ளது.

இந்த மார்கெட்டுகள் இருக்குமிடத்தில் காய்கறி வியாபாரிகள் தங்களுக்கு தேவையான இடவசதி, அடிப்படை அம்சங்கள் இல்லை என்பதால் மாற்று இடத்தில் எல்லா வசதிகள் அடங்கிய மொத்த காய்கறி மார்க்கெட்களை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அதேபோல பழங்களுக்கான மொத்த மார்க்கெட் ஒன்று உக்கடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. மேலும் கோவை மாநகரின் பெரியக்கடை வீதி, வைசியாள் வீதி, பவிழம் வீதி உள்ளிட்ட இடங்களில் சிறிய அளவில் தனியார் பழ மார்க்கெட்கள் உள்ளன. முதலமைச்சர் கடந்த நவம்பர் மாதம் கோவை வந்தபோது அவரிடம் 'கோயம்புத்தூர் ப்ரூட்ஸ் கமிசன் ஏஜென்ட் அசோசியேசன் சார்ந்தவர்கள் பழ வியாபாரத்துக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர் எனவும் தகவல் உள்ளது. மேலும் உக்கடம் பகுதியில் 4.50 ஏக்கர் நிலத்தில் உள்ள லாரிபேட்டையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் வேண்டுகோள் இருந்துவருகிறது. 

எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாதியில் நிற்கும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் பல வசதிகள் கொண்ட மொத்த காய்கறி, பழ அங்காடி மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான அலுவலக கட்டிடம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இது பற்றி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு முக்கிய உறுப்பினர் மோகன் கூறுகையில்:- 

பொதுமக்கள் தங்களுக்கு இந்த இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தான் வேண்டும் என கருதுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் மக்களை கூட்டி கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மாநகராட்சி விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் கருத்துக்கு பின்னரே இந்த திட்டத்தை கொண்டுவரலாமா என அரசு யோசிக்கவேண்டும். 

காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட் வந்தால் இங்கு குப்பைகள் சேருவது அதிகரிக்கலாம். இங்கு லாரி பேட்டை வருவதால் வளர்ச்சியும் பாதுகாப்பும் அதிகரிக்குமா? அல்லது பேருந்து நிலையம் அமைவதால் வளர்ச்சி, பாதுகாப்பு இருக்குமா? என்பதை பார்க்கவேண்டும். எங்கள் பகுதியில் மெட்ரோ வருகிறது என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் இல்லை என தெரியவருகிறது. கோவை தெற்கு பகுதிக்கு பெரிதும் எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை என்ற நிலை உள்ளது. 

இந்த நிலையில் மக்களின் வேண்டுகோள் இந்த இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவேண்டும் என்பதே. பேருந்து நிலையம் அமைவதால் வணிக ரீதியாக வளர்ச்சி கிடைக்கும் எனவும் இதனால் இங்குள்ள பல குறைபாடுகள் சரிசெய்யப்படும் எனவும் மக்கள் நம்புகின்றனர். எனவே மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவது மிக அவசியம். 

இவ்வாறு அவர் கூறினார்.