கோவை மாநகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 8 முதல் 9 டன் இறைச்சி கழிவுகள் உருவாகின்றன. அதுவே ஞாயிறு மற்றும் விசேஷ தினங்களில் இவை 20 டன்களாக அதிகரிக்கும்.

இவ்வாறு உருவாகும் கழிவுகளை வெள்ளலூரில் அமைந்துள்ள கோவை மாநகராட்சியின் குப்பை கிடங்கில் வைத்து தனி கட்டமைப்பு மூலம் மேலாண்மை செய்ய தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன் மூலம் இந்த கழிவுகள் மேலாண்மை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் அந்த நிறுவனம் இந்த கழிவுகளை மேலாண்மை செய்தது முறையாக இல்லாததாலும், தொடர்ச்சியாக அந்த இடத்தில் இருந்து 5 கிலோமீட்டருக்குள் உள்ள இடங்களில் துர்நாற்றம் ஏற்பட்டுவந்ததால், அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மாநகராட்சி சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்தது.

இருந்தபோதும் இப்போது வரை குப்பைக்கிடங்குக்கு கொண்டுவரப்படும் இறைச்சி கழிவுகள் சரியான முறையில் அழிக்கப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். குப்பைக்கிடங்கில் இறைச்சி கழிவுகள் புதைக்கப்படுகிறது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மக்கள் உடல் நலன் மற்றும் சுற்றுசூழல் நலன் பாதிக்கப்படும் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நேற்று கூட மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் இறைச்சி கழிவுகள் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனம் பழுதாகி அங்கேயே சில நிமிடங்கள் நின்றுள்ளது. இதனால் வண்டி நின்ற சாலை பகுதி மாசடைந்துள்ளது வீடியோவில் பதிவாகி உள்ளது.

இதுபோன்று எடுத்துவரப்படும் கழிவுகள் கிடங்கில் முறையாக மேலாண்மை செய்யப்படுகிறதா அல்லது புதைக்கப்படுகிறதா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடம் உள்ளது. 

இறைச்சிகள் அங்கு புதைக்கப்படுவதாக தான் அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து, குப்பை கிடங்கில் சரியான, அறிவியல் பூர்வமான முறையில் இறைச்சி கழிவுகள் மேலாண்மை செய்யப்படுவதை உறுதி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த விஷயத்தில் கோவை கலெக்டர் மற்றும் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் கோரிக்கை மனுவை தாக்கல் செய்ய அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டு உள்ளனர்.