"தரமான சாலை வசதி வழங்கப்படும்" என்று கோவை மாநகராட்சி வார்டு எண் 21 ன் கீழ் உள்ள பாரதியார் வீதி பகுதி மக்களிடம் மாநகராட்சி தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு மோசமாக இருந்த சாலைகளில் முதல் கட்டமாக அண்மையில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்கள் பெய்த மழையில் அங்கு பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட பகுதிகள் பழுதாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் மீண்டும் குண்டும் குழியுமான சாலையில் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சரவணம்பட்டி கிராமம், விநாயகபுரம் வார்டு எண்.21 கீழ் உள்ள பாரதியார் வீதி, அபிராமி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வீதிகளில் பல்வேறு திட்டங்களுக்கு தோண்டப்பட்ட குழிகளாலும், மழையினாலும் சேதமடைந்த சாலைகள் பல காலமாக அப்படியே இருந்தன. குறிப்பாக பாரதியார் வீதியில் சாலை பராமரிப்பின்றி கடந்த 15 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது.
இதுகுறித்து இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் 21 ஆம் வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரத்திடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதை அடுத்து, அவர் இதுபற்றி கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் தொடர்ந்து சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி வேண்டி கேட்டுக்கொண்டார்.
அதன் காரணமாக வார்டு எண்.21க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கடந்த பிப்ரவரி மாதத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வுக்கு பின்னர் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு அடுத்து ஸ்கீம் ரோடு மூலமாக கான்க்ரீட் சாலையாக உள்ள இந்த சாலைகளை தார் சாலைகளாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. அண்மையில் அங்கு பேட்ச் ஒர்க் பணிகள் நடைபெற்று இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த பேட்ச் ஒர்க் பழுதடைந்துள்ளது. இதனால் மீண்டும் சாலையின் பல்வேறு இடங்களில் குண்டு குழி இருப்பதால் அந்த சாலையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
"15 ஆண்டுகளாக காத்திருக்கிறோம் எங்களுக்கு எப்போதுதான் தார் சாலைகள் தரமாக அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்?" என்று அந்தப் பகுதி மக்கள் நெடுங்கால எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.
ஒரே மழையில் காணாமல் போனது பேட்ச் ஒர்க்! எப்போ தான் தார் சாலை போடுவீங்க? குண்டும் குழியுமான சாலையிலேயே 15 ஆண்டுகளாக பயணிக்கும் வடக்கு மண்டல 21 வார்டு மக்கள் கேள்வி!
- by David
- Nov 02,2024