கோவை மாநகரில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையங்களில் ஒன்று, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையம்.

அரசு பேருந்துகளுக்கு காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளநிலையில், தனியார் பேருந்துகளுக்கு கோவை மாநகராட்சி - மத்திய மண்டலத்தில் வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பால பகுதி அருகே சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் மற்ற அவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதை ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சி தரம் உயர்த்த நடவடிக்கைகள் எடுத்தது. சமீபத்தில் இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டது.
இதை இன்று திறந்த வைக்கவும் கோவை மாநகராட்சி மற்றும் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் ரூ. 30.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 15 புதிய திட்ட பணிகளை திறந்து வைக்கவும், ரூ.271 கோடி மதிப்பீட்டில் 1028 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று கோவை வந்தார். 
கோவையின் பொறுப்பு அமைச்சரும் தமிழக மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் அவர் இந்த வளாகத்தை திறந்து வைத்தார்.அத்துடன் முடிவற்ற புதிய திட்ட பணிகளை திறந்து வைத்தார், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த பேருந்து நிலையத்தில் மொத்தம் 37 பேருந்துகளை நிறுத்த முடியும். இந்த வளாகத்தின் வடக்கு பகுதியில் 11 கடைகள், தென்பகுதியில் 16 கடைகள் இடம் பெற்றுள்ளன.  

மேலும் இவற்றுடன் 1 பயணிகள் காத்திருப்பு அறை, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற 4 அமைப்புகள், ஆண் பெண்களுக்கு தனித்தனியே நவீன கழிவறைகள் உள்ளன.


Photos by David Karunakaran.S