'நான்' எனும் அகங்காரத்தை விட்டு, அ.தி.மு.க.வுக்காக செயல்பட தயார் - கோவையில் ஓ.பி.எஸ் பேச்சு
- by David
- Feb 19,2025
புரட்சித்தலைவர், அம்மா தந்த நல்லாட்சி மீண்டும் தமிழகத்தில் வரவேண்டும் என்பதற்காக 'நான்' எனும் அகங்காரத்தை விட்டு, கட்சிக்காக செயல்பட தயாராக உள்ளோம். இந்த கருத்தோடு இருப்பவர்களிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். பலரும் என்னிடம் பேசி வருகின்றனர் என அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, செங்கோட்டையன் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை நிறுவியது முதல் செங்கோட்டையன் கட்சிக்காக பல்வேறு நிலைகளில் குரல் கொடுத்து வருபவர். நானும் அவருடன் இணைந்து நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைப்பவராக அவர் உள்ளார்" என்றார். அவரை சந்தித்து பேசுவீர்களா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் பதிலளிக்கவில்லை.
உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு குறித்து பேசிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர தேர்தல் வியூகத்திற்காக அமித்ஷா என்னையும் இ.பி.எஸ்.ஸையும் அழைத்து பேசியிருந்தார். அதை ஏற்காததன் விளைவு அனைவருக்கும் தெரியும். இதில் ரகசியம் எதுவுமில்லை. கண்டிப்பாக ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கூறினார். மற்றவை அனைத்தும் பரம ரகசியம்.
பிளவு பட்டுள்ள அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா தந்த நல்லாட்சி மீண்டும் தமிழகத்தில் வரவேண்டும் என்பதற்காக 'நான்' என்னும் அகங்காரத்தை விட்டு, கட்சிக்காக செயல்பட தயாராக உள்ளோம். இந்த கருத்தோடு இருப்பவர்களிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். பலரும் என்னிடம் பேசி வருகின்றனர். வசை பாடுபவர்கள் நீண்ட நாள் வாழட்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.