கோவை மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நவம்பர் 9ஆம் தேதி சிறப்பு குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நவம்பர் மாதத்துக்கான குறைகேட்பு முகாம் வரும் 9ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் மாற்றம் மற்றும் குடும்பத்தலைவர் புகைப்படம் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை சிறப்பு குறைகேட்பு முகாம்
- by CC Web Desk
- Nov 08,2024