ஞாயிறு, திங்கள் என இரண்டு நாட்கள் பெய்த மழையை தாக்கு பிடிக்க முடியாமல் கோவை மாநகரம் திணறி வருவது இப்போது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
கோவை மாநகரில் ஞாயிறு மாலை 3 மணிக்கு மேல் இரண்டு மணி நேரம் மழை பெய்தது. அது கனமழையாக இருந்தது. மாநகரம் முழுவதுமே போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் காணப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருந்தது; சாலைகளில், சுரங்கப்பாதைகளுக்கு அடியில், மேம்பாலத்துக்கு அடியில் என தண்ணீர் முழுவதுமாக தேங்கி இருந்தது.
(இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் கிடைத்ததும் அங்கு தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது)
ஞாயிறு பெய்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளில், தெருக்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. வீடுகளுக்குள் சில இடங்களில் தண்ணீர் புகுந்தது.
ஞாயிறு அன்று பெய்த மழை மாலை முதலே நகரில் பாதிப்பை ஏற்படுத்தியது. கணபதி, அவிநாசி சாலை, ரயில் நிலையம், கோவை அரசு மருத்துவமனை, சிவானந்தா காலனி போன்ற பல்வேறு முக்கிய போக்குவரத்து சாலைகளிலே தண்ணீர் தேங்கி இருந்த காட்சிகளை பார்க் முடிந்தது. திங்கள் அன்றும் மழை நல்ல அளவில் பெய்தது. கோவை சாய்பாபா காலனி வழியே உள்ள ரயில்வே சுரங்க பாதையின் கீழே ஞாயிறு ஒரு தனியார் பேருந்து சிக்கிகொண்டதை பார்த்த மக்கள் அதேபோல மற்றொரு பேருந்து (அரசு) அதே இடத்தில் அடுத்த நாள் சிக்கிக் கொண்டவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் மக்களால் கவனிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால்:-
மாநகரில் உள்ள வடிகால் வசதிகளை இன்னும் மேம்படுத்தவேண்டி உள்ளது. இதற்கு முன்னதாக செய்யப்பட்ட வடிகால் வசதிகள் மூலம் பலன் உண்டு என்றாலும் அது போதுமானதாக இல்லை. மேலும் வடிகால் வசதிகளை மேம்படுத்த ரூ.96 கோடிக்கு அரசிடம் கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைத்ததும் மேலும் வடிகால் வசதிகள் மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டியது:-
குறிச்சி குனியமுத்தூரில் ரூ. 591.14 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.318.20 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.
ஒண்டிப்புதூர் பகுதிகளில் ரூ. 179.28 கோடியில் பாதாள சாக்கடைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சங்கனூர் ஓடையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி ரூ.49 கோடியில் நடைபெறுகிறது.
வடவள்ளி, வீரகேரளம், துடியலூர் ஆகிய பகுதிகளில் ரூ. 922. 16 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், வாலாங்குளத்தின் உபரிநீரை சங்கனூர் வாடகைக்கு கொண்டு செல்ல ரூ. 9 கோடியில் வடிகால் அமைக்கப்பட்டது.மூலதன மான்ய நீதியின் கீழ் 3.17 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. 7. 16 கோடியில் மழை நீர் வடிகால் கட்டி முடிக்கப்பட்டது.ரூ.5 கோடி மதிப்பீட்டில் குட்செட் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் மழை எப்போதிருந்து படிப்படியாக குறைய வாய்ப்பு?
கொங்கு மண்டலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனத்த மழை தொடரும். கோயம்புத்தூர் சிட்டிக்கும் மிதமானது முதல் கனமழை தொடரும். வியாழன் முதல் மழை படிப்படியாக குறையும் என கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
(படங்கள்: ஞாயிறு ஏற்பட்ட தாக்கத்தை தான் குறிக்கின்றன. பேருந்து சிக்கிக்கொண்ட படம் மட்டுமே திங்கள் எடுக்கப்பட்டது. Credits & Thanks : TNIE - சென்பகபாண்டியன்)