கோவை ரேஸ் கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டதில் இருந்து, அங்கு வார இறுதி மாலை நேரங்களில் மக்கள் கூடுவது அதிகரித்துள்ளது. அப்பகுதிகளில் குழந்தைகள் விளையாடி மகிழ்வதுடன், சிற்றுண்டிகளும் அருகே கிடைப்பதால், மாலை நேரங்களில் பொழுதுபோக்குக்கான இடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அங்கு மக்கள் கூட்டமும், வாகன நெரிசலும் மாலை நேரங்களில் அதிகரிக்கிறது. 

எனவே இப்பகுதியில் நிலவும் இச்சூழலுக்கு தீர்வு காணும் விதத்தில், 200 இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகொண்ட பார்க்கிங் வளாகம் அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ. 6 கோடியில் இந்த வளாகத்தை அமைக்க மதிப்பீடு தயாரிக்கும் பணி துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி ஆனதும், ஒப்புதல் பெறப்பட்டதும் பணிகள் துவங்கும் என தெரியவருகிறது.