கோவை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளின் வேகம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அரசு துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி, சாலையில் பயணிப்பவர்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் எழுந்துவருகிறது.

பிப்ரவரி முதல் இதுவரை வேகமாக செல்லும் தனியார் பேரூந்துகளால் மேட்டுப்பாளையம் - கோவை வழித்தடத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். கடைசியாக கடந்த வெள்ளியன்று கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாடில்லாமல் சென்று மோதியதில் ஜாடையாம்பாளையத்தை சேர்ந்த முருகன் (50) என்பவர் உயிரிழந்தார். இவர் மொத்த வியாபார முட்டை கடையில் பணியாற்றி வந்தவர்.

கோவை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் 30-துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கோவை - மேட்டுப்பாளையம் வழி என்பது காரமடை, சிறுமுகை மற்றும் நீலகிரி செல்ல முக்கிய தடமாக இருப்பதால் பேருந்து பயணிகளை முதலில் அதிகமாக ஏற்றிச்செல்ல தனியார் பேரூந்துகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல சிக்னல்கள்,  பயணிகள் இறக்கம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை சமாளித்து பயன்பட்டால் கூட 1 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்றாலும் அன்றைய நாளில் நிலவும் போட்டியை வெல்ல, சாலையில் தனியார் பேருந்துகள் பாய்ந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது.

பல தனியார் பேருந்துகள் 50 நிமிடங்களில் காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று விடுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் பயணிகளை வண்டிகளில் நிற்க்கவைத்து தனியார் பேருந்துகள் செல்கின்றன. இவ்வாறு சில அரசு பேருந்துகளும் செய்கின்றன.

தனியார் பேரூந்துகளுக்குள் உள்ள போட்டியால் வாகனஓட்டிகள், பயணிகள் தேவையில்லாமல் விபத்துக்குள்ளாவது, உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் குறைய வேக கட்டுப்பாடு கருவி (speed governor) பேருந்துகளில் பொருத்தப்படுவது, அடிக்கடி பேருந்துகளில் ஆய்வுகள் நடத்துவது போன்ற விபத்து தடுப்பு நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அரசு துறையினர் எடுக்கவேண்டும் என 'நம்ம மேட்டுப்பாளையம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை கோவை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் மட்டுமில்லை. கோவை - அவிநாசி - திருப்பூர் - ஈரோடு வழித்தடத்தில் செல்லும் சில தனியார் பேருந்துகள் கோவை மாநகரின் அவிநாசி சாலை, நீலாம்பூர் வழியே செல்லும்போது ஒன்றை ஒன்று முந்திட முயல்வதால் வாகன ஓட்டிகள் அபாயமான நிலைமையை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. மேலும் இந்த வாகனங்கள் தொடர்ந்து அதிக ஒலியை எழுப்பும் ஹாரன்களை அடித்து செல்வதால் அதுவும் ஒரு தொல்லையாகவே உள்ளது.

இதுகுறித்தும் கொஞ்சம் போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.