கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.2000, ரூ2,500 மட்டுமே வழங்கப்படுவதாகவும் ஒரு மாத சம்பளத்தை போனஸாக தர வலியுறுத்தியும் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
'அதிகார குரல் கூட்டமைப்பு' சார்பில் இந்த காத்திருப்பு போராட்டமானது நடைபெற்று வந்தது. இதுகுறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடருமென்று தூய்மை பணியாளர்கள் அறிவித்ததை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் மேற்கொள்வதற்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வருகை புரிந்திருந்தனர்.
ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்து தற்காலிக இரும்பு கேட்டை கொண்டு அலுவலக நுழைவாயிலை மறைத்ததால் போராட்ட மேற்கொள்ள வந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பே கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்தால் அமைதியான வழியில் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்வோம் என்று கூறிய போதிலும் காவல் துறையினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பே திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் மேற்கொண்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
Photo & Info by Nan-Sin
தீபாவளி போனஸ் கேட்டு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த வந்த தூய்மை பணியாளர்கள் கைது!
- by CC Web Desk
- Oct 18,2024