கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையை அடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் உடன் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசைத்தறியாளர்கள் உருவாக்கும் சோமனூர் ரகங்களுக்கு 15%, இதர ரகங்களுக்கு 10% கூலி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை,திருப்பூர் விசைத்தறியாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் பூபதி செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

கடந்த 33 நாட்களாக நியாயமான கூலி உயர்வு வேண்டி வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது. இன்று ஜவுளி உற்பத்தியாளர்களுடன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதவள  மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, செய்தி துறையை அமைச்சர் சாமிநாதன் மற்றும் கோவைம் திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

விசைத்தறியாளர்கள் உருவாக்கும் சோமனூர் ரகங்களுக்கு 15%, இதர ரகங்களுக்கு 10% கூலி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2022 ஒப்பந்தத்தில் இருந்து இந்த உயர்வு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை இதற்கு உண்டான ஒப்பந்தத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உத்தரவாதத்துடன் நாங்கள் இன்றைய உண்ணாவிரத போராட்டத்தையும் வேலை நிறுத்தத்தையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்.  நாளை எங்கள் பொதுக்குழுவை கூட்டி வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.