சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு கோரி கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது - கோவை மாநகராட்சி
- by David
- Mar 28,2025
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பேருந்து நிலையத்தில் தினசரி 300 பேருந்துகள் மூன்று முதல் நான்கு முறை வந்து செல்கிறது. தினமும் 10,000 பேர் இந்த வளாகத்தை பயன்படுத்துகிறார்கள்.
தற்போது இப்பேருந்து நிலையம் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைகாலங்களில் மழைநீர் தேங்கிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் இதனுள் நடந்து செல்லும்போதும், வாகன போக்குவரத்தின் போதும் மிகவும் இடையூறு ஏற்படுகிறது. எனவே பேருந்து நிலையம் முழுவதையும் தரம் உயர்த்துவதற்கும் புதியதாக நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு நவீனப்படுத்துவதன் மூலம் போக்குவரத்திற்கு சுலபமாக இருக்கும் வகையில் இப்பேருந்து நிலையத்தின் முன்பகுதிகளில் வணிகவளாகம் கட்டுவதற்கும்,பேருந்து நிலையத்தின் முன்பகுதிகளில் பராமரிப்புபணி செய்யவும், கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும், பேருந்து நிலையத்தின் மேற்கூரைகளை மாற்றி அமைக்கவும், சிமெண்ட் கான்கிரீட் ஓடுதளம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு ரூ.10 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளூர் திட்டக்குழுமம் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நகர் ஊரமைப்பு துறைக்கு உரிய நிதி ஒதுக்கீடு கோரி கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.