கோவை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன், மியூசிக் ஹாரன் பயன்படுத்துவதால் அது எழுப்பக்கூடிய அதிக சத்தம் பேருந்துகளில் உள்ளவர்கள் துவங்கி, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

இது பற்றி அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தனியார் பேருந்துகள் சிலவற்றில் இன்னும் ஏர் ஹாரன், மியூசிக் ஹாரன் பயன்பாட்டில் உள்ளது எனவும் இதனால் சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எனவே இதை முற்றிலும் தடுக்க, கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி அதிகபட்சம் 2 வாரங்களுக்குள் அவரவர் நிறுவனத்தின் கீழ் உள்ள பேருந்துகளில் இருந்து ஏர் ஹாரன், மியூசிக் ஹாரன் மற்றும் பேருந்துக்குள் நியான்/டிஸ்கோ விளக்குகள் பொருத்தியிருந்தால் அதையும் அகற்றிட வேண்டும். 
இத்துடன் பேருந்துக்குள் பயணக்கட்டண விவரம் மற்றும் பயணிகள் புகார் தெரிவிக்கும் எண்கள் ஆகியவை தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்த 2 வாரத்திற்கு பின்னர் கோவை மாவட்டம் முழுவதும் கோவை ஆர்.டி.ஓ.க்கள் சார்பில் சோதனைகள் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.