கோவையில் பூப்பெய்திய மாணவியை படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதித்த பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
- by David
- Apr 10,2025
கோவையில் பூப்பெய்திய மாணவியை தேர்வறையை விட்டு வெளியே தனியாக தரையில் அமர வைத்து தேர்வு எழுத அனுமதித்த கோவை சித்பவானந்தா பள்ளி முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம் பின்வருமாறு :-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது சுவாமி சித்பவானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி. இந்த தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவி 5 நாட்களுக்கு முன்பு பூப்படைந்துள்ளார்.
இந்த நிலையில் ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு சென்ற மாணவியை தனியாக படியில் அமர வைத்து கடந்த 7ஆம் தேதி அறிவியல் தேர்வு, 9ஆம் தேர்வு சமூக அறிவியல் தேர்வுகளை எழுத பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளனர். ஆனால் மாணவியின் தாயார் மாணவியை தனியே அமர வைத்து தான் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் அவரின் மகள் எங்கு வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை காண அவர் பள்ளிக்கு சென்றபோது, அவரின் மகள் வெளியே படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுதப்பட்டது தெரியவந்தது. இதை அவர் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில், அந்த மாணவியின் தாயார் மாணவியிடம் உன்னை யார் இங்கு அமர வைத்து தேர்வு எழுத சொன்னார்கள் என கேட்டதற்கு அந்த மாணவி 'பிரின்சிபல் மிஸ்' என்கிறார். இது வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ வெளியே வேகமாக பரவிய நிலையில், இன்று காலை பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டி சிங் சம்பவம் நடைபெற்ற பள்ளியில் நிர்வாகத்தினருடனும் மாணவியின் பெற்றோரிடம் தனித்தனியாக விசாரித்தார். அதை அடுத்து மனைவியிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் கோவை தலைமை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி அங்கு விசாரணை நடத்தியுள்ளனர்.
தற்போது காவல் துறை, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் அந்த பள்ளியின் முதல்வர் ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடைசியாக 10.4.2025 மாலை 4:17 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது