நவம்பர் 4ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைக்கவும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நூலகத்திற்கான அடிகல்லை நாட்டவும் கோவை வருகை தரவுள்ளார் என தகவல் அக்டோபர் 23ம் தேதி வெளியாகியிருந்தது.

ஆனால் அதற்கடுத்து 26ம் தேதி முதலமைச்சர் வருகை தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. நவம்பர் 4க்கு பதிலாக முதலமைச்சர் நவம்பர் 5 ல் கோவைக்கு வருகை தர இருக்கிறார். அதற்கு அடுத்த நாளும் (நவ.6) அவர் கோவையில் தங்க உள்ளார்.

முதலாவதாக நவம்பர் 5ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவை விளாங்குறிச்சி பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள  IT பூங்காவை திறந்து வைக்கிறார். அன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்திலும், அரசு விருந்தினர் மாளிகையிலும் தொழில்த்துறை சார்ந்தவர்களை சந்திகிறார். அதற்கடுத்த நாள் காலை 11 மணிக்கு செம்மொழி பூங்கா வளாகத்தின் அருகில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

இந்த 2 நாட்களில் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களின் செயல்பாடு குறித்து கோவையில் கள ஆய்வினை முதல்வர் செய்ய உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் பங்கெடுக்கும் விழா வளாகங்களில் நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் கோவையின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அவருடன் ஆய்வில் ஈடுபட்டனர்.