சென்னை, கோவை மட்டுமல்ல நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வழக்கத்திற்கு அதிகமாகவே பரவி உள்ளது. இது ஏன் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. "ஒரு பகுதியில் மழை பொழிவு இருந்து அதன் பின்னர் அங்கு வெயில் அடிக்கும் போது வைரஸ் தொற்று என்பது அதிகமாக இருக்கும்," என்கிறார் கோவையை சேர்ந்த பொதுநல மருத்துவர் ஆதித்யன் குகன்.
"மக்களின் சுவாசக் குழாயில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ்களை ரெஸ்பிரேட்டரி வைரஸ்கள் என்போம். இன்ஃப்ளுயன்சா வகை வைரஸ், அடினோ வைரஸ் மற்றும் RSV வகை வைரஸ் போன்றவை இப்படி பட்ட வைரல் தொற்றை ஏற்படுத்தும். அதில் RSV வைரஸ் பொதுவாக குழந்தைகளையும், சில முதியவர்களையும் பாதிக்கக்கூடியது," என மருத்துவர் ஆதித்யன் கூறுகிறார்.
கோவை போன்ற நகரங்களில் மழை சில காலம் பெய்து அதற்கடுத்து வெயில் மற்றும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. எனவே பருவநிலை மாற்றம் இந்த வைரஸ் தொற்று பரவ ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
என்ன செய்யக்கூடாது?
தொற்று ஏற்பட்டால் இரண்டு முதல் ஆறு வாரங்களுக்கு ஒருவரின் உடலில் காய்ச்சல், இருமலை நிலைக்கச் செய்வது இந்த தொற்றை ஏற்படுத்தும் வைரஸின் இயல்பு.
எனவே காய்ச்சல் குறைந்தாலும் இருமல் குறைவதில்லை என்று கருதி மருந்தகங்களில் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் அதிக அளவில் எடுத்துக் கொள்வது தவறு.
அப்படி எடுத்துக்கொண்டால், பிற்காலத்தில் தொற்று ஏற்படும் போது இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக் கொண்டால் பலன் இல்லாத வகையில் மாற வாய்ப்புள்ளது. எனவே இதன் இயல்பு இரண்டு முதல் ஆறு வாரங்களுக்கு இருமல் இருப்பது தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் ஆதித்யன்.
என்ன செய்யவேண்டும்?
தொற்று ஏற்பட்டால், வைரசால் தான் இருமல் வருகிறது, இது படிப்படியாக தான் குறையும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு ஏற்ப நாம் நீராவி பிடிப்பது, புரத சத்து கொண்ட உணவு எடுப்பது , உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்வது ஆகியவற்றை செய்வது மிகவும் நல்லது. இதனால் இயற்கையாகவே இந்த வைரஸ் தொற்றிலிருந்து சீக்கிரம் மீள முடியும்.
மேலும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் கொரோனா காலத்தில் பின்பற்றிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. முகத்திற்கு N 95 வகை மாஸ்க் அணிவது, 20 நொடிகளுக்கு கைகளை சோப் கொண்டு கழுவுவது, அதிக கூட்டம் உள்ள பகுதிகளுக்கு சில காலத்திற்கு செல்லாமல் இருப்பது போன்றவை நல்லது என்கிறார் மருத்துவர் ஆதித்யன்.
காய்ச்சல் காலம் நம் எதிரே!
இதுபற்றி மேலும் சில தகவல் மூலம் ஆய்வு செய்கையில், செப்டம்பர் மாதத்தின் பாதியில் இருந்து ஃப்ளு காய்ச்சல் பரவும் காலம் ஆரம்பித்து, டிசம்பர் - பிப்ரவரி இடையே உச்சம் தொட்டு அதன் பின் வலுவிழக்கும். இந்த காலம் ஃப்ளு சீசன் என்று கருதப்படுகின்றது. எனவே பொதுமக்கள் தங்களின் அருகில் உள்ள நம்பகமான மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா என கேட்டு அதன்படி நடப்பது நல்லது என தெரியவருகிறது.
கோவையின் சில இடங்களில் பரவும் காய்ச்சல்! மக்களிடையே ஏற்படும் தொடர் இருமல்! என்ன காரணம்? தவிர்க்க என்ன செய்யலாம்?
- by David
- Sep 23,2024