தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருநதார். அப்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கில் அவர் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அவரை 14.6.2023ல் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்தார். அதற்கு பின்பு அவர் வெறும் எம்.எல். ஏ. வாக தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்காத நிலையில்,வழக்கு விசாரணை நீண்ட காலமாக சென்றுகொண்டே இருக்கும் நிலையில் அவர் சிறையில் வைக்கப்பட்டுவருவது அவருக்கான உரிமையை பறிக்கும் விதத்தில் உள்ளது என  கருதி உச்ச நீதிமன்றம் அவருக்கு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கியது. 

ஜாமின் வாங்கிய 3 நாட்களில் அவர் மீண்டும் அமைச்சரானார். இந்த நிலையில் அவர் அமைச்சராக தொடர்வது இந்த வழக்கு விசாரணையில் சாட்சிகள் சாட்சியமளிப்பதை தடுப்பதாக அமலாக்கத்துறை வாதம் செய்தது. இந்த நிலையில்,  ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என முடிவு செய்து ஏப்ரல் 28க்குள் கூற உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட நிலையில், அவர் பதவி விலகினார்.

இந்நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வருவார் என்பதை குறிப்பிடும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.