மலையாள திரை உலகில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக பிரபலமானவர் நடிகை ஹனி ரோஸ்.  இவர் தன்னிடம் பாலியல் ரீதியாக முறையற்ற விமர்சனங்களை செய்ததாக பிரபல தொழிலதிபர் பாபி செம்மனுர் மீது எர்ணாகுளம் மத்திய காவல் நிலைய போலீசாரிடம் நேற்று புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று கோவை பெரியகடைவீதி பகுதியில் பாபிக்கு சொந்தமான தங்க நகை கடை திறப்பில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி உடன் இணைந்து காலை 10:30 மணிக்கு பாபி திறக்கவிருந்தார். இந்நிலையில் இன்று அவரை வயநாட்டில் உள்ள அவருடைய ரிசார்ட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனால் அவர் இல்லாமலேயே கடை திறக்கப்பட்டது.

யார் இந்த பாபி?

பாபி செம்மனுர் கேரளாவை சேர்ந்த பெரும் தொழிலதிபர். தங்க நகை தொழில் செய்துவருகிறார். அதை தவிர சமூக சேவை நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர். 2012ல் கால்பந்து உலகின் ஜாம்பவான்களின் ஒருவரான மாரடோனாவை கேரளா அழைத்து வந்து தனது நகை கடையை திறக்கவைத்ததில் இவர் மிக பெரும் கவனத்தை பெற்றார். 


சில மாதங்களுக்கு முன்னர் பாபி செம்மனுர் கோவையில் உள்ள ரயில் பேட்டி உணவகத்தை குத்தகை எடுத்து அதற்கு ' Boche' போச்சே எக்ஸ்பிரஸ் என பெயர் வைத்து, உணவு போட்டி ஒன்றை நடத்தியதன் மூலம் கோவையில் கவனம் பெற்றார்.

என்ன புகார் கொடுத்துள்ளார் ஹனி ரோஸ்?

கடந்த ஞாயிறு அன்று ஹனி ரோஸ் தனது முகநூல் பக்கத்தில் தான் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் சமூக ஊடகம் மூலம் தன்னை பாலியல் ரீதியாக கிண்டலான விமர்சனங்களை செய்து வருத்தப்படவைத்ததாக பதிவிட்டார். அதற்கடுத்து செவ்வாய் அன்று அவர் தான் தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது புகார் கொடுத்துள்ளதாக நேரடியாக பதிவு செய்தார்.

அவர் தனது புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவின் கண்ணுரில் உள்ள நகை கடை திறப்பின் போது முறையற்ற பாலியல் ரீதியான விமர்சனங்களை தான் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ரோஸ் கொடுத்த புகாரின் பேரில் பாபி செம்மனுர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த புகாரின் மீது காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கை ஆறுதலை தருவதாக அவர் கூறியதாக தகவல் உள்ளது. மேலும் அவர் இந்த நடவடிக்கை எடுத்த கேரள அரசு, காவல் துறை, பல்வேறு அரசியல் கட்சியினர், ஊடகம் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் தனது நன்றிகளை இன்று அவர் தெரிவித்துக்கொண்டார்.

ரோசுக்கு குவியும் ஆதரவு

தவறு செய்தால் அவர் பெரும் செல்வாக்கு உள்ள நபராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி வெளிப்படையாக நியாயம் கேட்கவேண்டும் என துணிச்சலாக முயற்சி எடுத்த ஹனி ரோசுக்கு பாராட்டும் ஆதரவும் கிடைத்துள்ளது.

மறுக்கும் பாபி

இந்நிலையில் தான் ரோஸ் மீது மதிப்பு குறைவான எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என பாபி செம்மனுர் கூறியதாக PTI தெரிவித்துள்ளது.  "அவர் என்னுடைய 2 கடைகளில் திறப்புவிழாவில் பங்கேற்றுள்ளார். நான் சில ஜோக்குகளை கூறுவேன். அவருக்கு அப்போது எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை. அனால் பல மாதங்களுக்கு பின்னர் அவர் என் மீது புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்," என பாபி தெரிவித்துள்ளார்.