ஜூலை 21 அன்று பரமக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்த ரஜினி எனும் 36 வயது நபர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த POCO பிராண்டின் ஸ்மார்ட் போன் வெடித்தத்தில்  பைக்கில் இருந்து தடுமாறி விழுந்து, தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் உபயோகித்த ஸ்மார்ட் போன் POCO M5 எனும் மாடல் என்பதும் அதை அவர் 16.9.2023ல் வாங்கியுள்ளார் என்பதும், வாரண்ட்டி காலத்தில் தான் இந்த போன் வெடித்துள்ளது என்பதும் செய்திகளில் வெளியானது. வெடித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்த அளவிற்கு ஆபத்தான நிகழ்வு இல்லையென்றாலும், கோவையில் POCO நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றால் இளைஞர் ஒருவர் கண்கலங்கும் நிலைக்கு சென்றுள்ளார்.

சூலூர் பகுதியில் உள்ள தென்னம்பாலையத்தை சேர்ந்தவர் தினகரன். ஆட்டோ ஓட்டுனராக உள்ள இவர் POCO நிறுவனத்தின் C61 மாடல் ஸ்மார்ட் போனை 19/8/2024 வாங்கியுள்ளார். வாங்கிய 2 நாட்களில் போனின் திரையில் சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

வாங்கி 1 மாதம் கூட ஆகாத நிலையில் மொபைல் போனின் திரையில் வெள்ளை கோடுகள் வருவதால் சர்வீஸ் சென்டருக்கு சென்று வாடிக்கையாளர் என்ற முறையில் ஆதங்கத்துடன் அவரும், அவர் தரப்பினரும் பேசியுள்ளனர். வாங்கி 2 நாட்களில் சர்விஸ் செய்துதான் ஆக வேண்டுமா என அவர் சர்வீஸ் சென்டரில் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கொடுத்த பதில் தன்னை பாதித்ததாகவும் அவர் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

அவரின் மனநிலையை புரிந்துகொள்ளாத வகையில் அந்த மையத்தில் இருந்தவர்கள் பேசியதும், இதற்கு சர்வீஸ் தான் தீர்வு என அந்த மையத்தில் உள்ளவர்கள் கூறுவதை ஏற்காமல் விவாதம் செய்த தினகரன் தரப்பினரும் பேசுவது இன்று 2 லட்சம்+ பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. POCO மீது இந்த வீடியோவின் கீழ் உள்ள கமெண்ட் பகுதியில் பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.