கோவை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டி பட்டணம் ஊராட்சி மக்கள் ஒரு தரப்பினர் கோரிக்கை ... வேண்டவே வேண்டாம் என போராட தயாராகும் மலுமிச்சம்பட்டி பகுதி மக்கள்!
- by David
- Jan 08,2025
கோவை மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள் மற்றும் 1 நகராட்சி என 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்படுவதாக அண்மையில் அரசாணை வெளியானது.
அதன் படி மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலுார் ஆகிய 4 பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
மேலும் சூலுார் பேரூராட்சியுடன் கலங்கல், காங்கயம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கப்பட்டு அது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பட்டணம், கணியூர், அரசூர் ஊராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மக்கள் தொகை மற்றும் வருமானத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டணம் ஊராட்சியின் ஒரு பிரிவினர், இந்த ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர் எனவும் இதை ஊராட்சியில் இருந்து பேரூராட்சியாக மாற்றுவதாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மக்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
'பட்டணம் ஊராட்சி மக்கள் மன்றம்' எனும் அமைப்பு சார்பில் இதுபற்றி தெரிவிக்கையில், தற்போது வெளிவந்துள்ள அரசாணையில் பட்டணத்தில் மக்கள் தொகை 9196 என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் பட்டணம் ஊராட்சியில் மின் இணைப்புகள் மட்டுமே ஏறத்தாழ 9000 உள்ளது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1.6.2022ன் தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்ட அளவீடு படி இங்கு அப்போதே 23,218 பேர் உள்ளனர் என அரசு வழங்கிய தகவல் உள்ளது.
இப்போது அங்கு மக்கள் தொகை சுமார் 35,000 இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால் பழைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பட்டணம் ஊராட்சியில் இருந்து பேரூராட்சியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டணம் பகுதியில் சாலைகள் சரிவர இல்லை. குடிநீர் வசதிகள் போதிய அளவுக்கு இல்லை என கூறும் 'பட்டணம் ஊராட்சி மக்கள் மன்றம்' பட்டணத்தை பேரூராட்சியாக மாற்றுவதை விட மாநகராட்சியுடன் இணைப்பதன் மூலம் தான் அந்த பகுதி மக்களுக்கு எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என கூறுகின்றனர். இதுகுறித்து அரசிடம் வேண்டுகோள் முன்வைக்கவும் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இணைப்புக்கு எதிர்க்கும் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மக்கள்!
மற்றொரு பக்கம் கோவை மாநகராட்சியுடன் இணைவதற்கு மலுமிச்சம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்த அப்பகுதி மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவும், போராட்டங்கள் மூலம் உணர்த்தவும், அடுத்தடுத்த நடவடிக்கைகளை செயலாற்றிட குழு அமைத்திட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், சமூக அமைப்பினர், தன்னார்வு அமைப்பினர், பெண்கள் குழுவினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இன்று மலுமிச்சம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு எடுக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைளை பரிசீலிக்காத நிலையில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரை சந்திப்பது எனவும் முடிவு செய்துள்ளனர் என தகவல் உள்ளது.