கோவை உள்ளூா் திட்ட பகுதிக்கான மாஸ்டா் பிளான் (முழுமை திட்டம்) கடைசியாக 1994ல் தான் புதுப்பிக்கப்பட்டது. அதற்கடுத்து கோவை மாநகரம் பலகட்ட வளர்ச்சி அடைந்துள்ளது.

கோவை மாநகரில் 2041 ஆம் ஆண்டில் 45 லட்சம் மக்கள் வசிப்பார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே அப்போது தேவைப்படும் பொது உள்கட்டமைப்புகள், மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வசதிகள், மேலாண்மை திட்டங்கள் என பலவற்றை கருத்தில் கொண்டு ஒரு புது மாஸ்டர் பிளான் மாநகருக்கு வேண்டும் என்ற வேண்டுகோள் தொழில்துறை, சமூகம்&இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய அரசு பொறுப்பேற்றதும் பல மாதங்களாக வெவ்வேறு அரசு துறைகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஒரு வரைவு மாஸ்டர் பிளான்-னை உருவாக்கின. இது கோவை மாவட்ட நிர்வாகத்தால் 2023 அக்டோபர் மாதம் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  இதற்கு அரசு ஒப்புதல் தந்து 2024 பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று இந்த வரைவு அறிக்கையை அதற்கான பிரத்தியேக  இணையதளம் மூலம் வெளியிட்டது. இந்த அறிக்கையை மக்கள் பார்க்கவும், தங்கள் கருத்துக்களை சொல்லவும் மே 15, 2024 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

அதையடுத்து அந்த அறிக்கையின் மீது தொழில்துறையினர், கட்டுமான துறையினர், விவசாயிகள் மற்றும் பலர் தங்களின் ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர். மொத்தம் 3500 பரிந்துரைகள் செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்து அரசிடம் சமர்பித்து, மாஸ்டர் பிளானை இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மற்றும் மதுரைக்கான மாஸ்டர் பிளான் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் இதுபற்றி வெளியான அண்மை தகவல் படி, மக்கள் தரப்பில் இந்த திட்டம் பற்றி கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் மாஸ்டர் பிளானில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், தற்போது திட்டத்தின் இறுதி அறிக்கையில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதிகள் எவை என்பது பற்றி இறுதி செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரியவருகிறது. இதை மார்ச் இறுதிக்குள் வெளிக்கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.