கோவை மாநகராட்சிக்கு ஒரு நாளுக்கு 200 மில்லியன்+ லிட்டர் நீர் தேவைபடுகிறது. இதை சிறுவாணி ஆணை மற்றும் பில்லூர் குடிநீர் திட்டம் மூலம் பெற்றுவருகிறோம்.

கோவை மாநகராட்சியுடன் 10 ஆண்டுகளுக்கு முன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் பேரூராட்சிகள், 7 டவுன் பஞ்சாயத்து பகுதிகள், 1 கிராம பஞ்சாயத்து சேர்க்கப்பட்டன.

2040ல் இப்பகுதிகளின் குடிநீர் தேவை என்னவாக இருக்கும் என்பதையும் அந்த காலத்தில் கோவை நகரத்தின் தேவையை கருத்தில் கொண்டு அவற்றை  பூர்த்தி செய்யும் நோக்கில் பில்லூர் 3 வது கூட்டு குடிநீர் திட்டம் 2018ல் ரூ. 779 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் மார்ச் 2021ல் துவங்கியது.

இந்த திட்டம் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு  மாநகராட்சி பகுதியில் உள்ள 6 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் வரை சென்றடைய பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் பகுதி இயல்பு நீர் (RAW Water) சேகரிப்பு நிலையம் அமைப்பதாகவும், இரண்டாம் பகுதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாகவும் மூன்றாம் பகுதி சுத்த நீர் கொண்டு வரும் குழாய் அமைப்பதாகவும் உள்ளது.  

இதில் முதல் பகுதியாக முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயல்பு நீர் சேகரிப்பு நிலையம் பணிகள் முடிவுற்று நீர் உந்து நிலையத்தில் மின் மோட்டார்களை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்த சோதனை ஓட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி,  மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று இன்று பார்வையிட்டனர்.