பேரூர் கோவிலில் தமிழ் மொழியிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும்- முற்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
- by CC Web Desk
- Feb 07,2025
கோவையில் பழைமை வாய்ந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற 10ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு நிகழ்வுகளில் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறி கோவையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் தரப்பு மற்றும் ஆன்மீகவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் தமிழில் வழிபாடு நடத்த அனுமதி கோரியதை ஏற்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழிலிலும் வழிபாடு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.