14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வர சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த, 4ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 7ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, 108 மூலிகை பொருட்கள் ஆகுதி, பேரொளி வழிபாடு, மலர் போற்றுதல், திருமுறை விண்ணப்பம் நடந்தது. மாலை, 4:15 மணிக்கு, ஐந்தாம் கால யாக பூஜை, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடந்தது.

இதனையடுத்து, இன்று காலை, 5:45 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், காலை, 9:50 மணிக்கு, ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை, 10:05 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், நடராஜப்பெருமான், தண்டபாணி ஆகிய மூல மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், பேரூர் ஆதீனம் தவித்திரு சாந்தலிங்க அடிகளார், கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், ஆன்மீக பெருமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இன்று மாலை, 5:00 மணிக்கு, பட்டீஸ்வரருக்கு பெரும் திருமஞ்சனமும், பேரொளி வழிபாடும், திருக்கல்யாணமும், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பேரூர் பகுதியில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Content by SMK