கோவையில் செம்மொழிப்பூங்கா அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகிறார். அதே தினத்தில் கோவை அவரம்பாளையம் பகுதியில் SNR அரங்கத்தில் 'மக்களோடு முதல்வர்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிலும் அவர் கலந்து கொள்ள்கிறார். அப்போது அண்மையில் கட்டிமுடிக்கப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அப்பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.115 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட பணிகள் 2020 நவம்பரில் துவங்கியது.

பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தால் 3 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

மே 2022ல் இதை முடிக்க திட்டம் இருந்தது. ஆனால் பல காரணங்களினால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க முடியாமல் பணிகள் நடைபெற்று கொண்டே இருந்தது. தற்போது இது நிறைவுக்கு வந்து, திறக்கப்படவுள்ளது.

இது பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.