கோவை சத்தி புறவழி சாலை திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க முடிவு ! யார்? ... ஏன் ?
- by David
- Mar 10,2025
கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்டத்திற்கான பணிகளை விரைவில் துவங்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
4 வழி பசுமை சாலையாக திட்டமிடப்பட்டுள்ள இந்த புது புறவழி சாலை மொத்தம் 92 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும். இது கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் துவங்கி அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து, புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலத்தை அடையும். சத்தியமங்கலத்திலிருந்து தமிழக-கர்நாடக எல்லை பகுதி அருகே உள்ள ஹாசனூரில் முடிவடையும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த அரசு இதழில் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
எனவே இந்த திட்டம் குறித்து யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் அறிவிப்பு வெளியானதிலிருந்து 21 நாட்களுக்குள் ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும் என நிலம் கையகப்படுத்தல் பணிக்கான கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இதற்கடுத்து சமீபத்தில் கோவை சத்தி புறவழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர், இந்த திட்டத்திற்கு நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களை கையகப்படுத்தி அதில் புறவழி சாலை அமைப்பது தேவையற்றது எனவும், இதற்காக தங்கள் விவசாய நிலங்களை வழங்குவதில்லை எனவும் முடிவு செய்தனர்.
இந்நிலையில் நாளை (11.3.25) அன்னூர், கோவில்பாளையம் வட்டாரங்களை சேர்ந்த, புறவழிச்சாலையால் பாதிக்கப்படும் பொது மக்கள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து நிலம் எடுத்தால் பணிக்கான கோவை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து 15 கேள்விகள் அடங்கிய ஆட்சேபனை கடிதம் வழங்க, முடிவு செய்துள்ளதாக தகவல் உள்ளது.