ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும்.
சிம் கார்டு வாங்குவது, ரயில் டிக்கெட் பதிவு, வங்கி கணக்கு துவங்குவது முதல் பல்வேரு அரசு சேவைகள், நல திட்ட உதவிகள் பெறுவதென, ஆதார் தேவைப்படுகிறது.
நீங்கள் ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் www.myaadhaar.uidai.gov.in எனும் இணையத்தளம் மூலம் உங்கள் ஆதரில் உங்களின் அடையாளம் (Proof Of Identity - POI) மற்றும் தங்கியுள்ள முகவரி (ProofOfAddress - POA) ஆகியவற்றை புதுப்பிக்க UIDAI அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 என அறிவிக்கப்பட்ட நிலையில் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி டிசம்பர் 14 ஆம் தேதிவரை காலக்கெடு கொடுத்துள்ளது UIDAI. இதற்க்கு பிறகு ஆதார் அட்டையைப் புதுப்பிக்க ரூ.50 செலவாகும்.
கோவையில் மக்கள் மத்தியில் எழும் கேள்வி?
ஒருவேளை ஆதார் தகவலை புதுப்பிக்காமல் இருந்துவிட்டால் அரசு சார்பில் வரும் உரிமை தொகை, பிற மானியங்கள் நின்றுவிடுமோ என கோவையில் பொதுமக்கள் மக்கள் மத்தியில் பீதி இருப்பதால் அவர்கள் முகாம்கள் நடைபெறுவது பற்றி விழிப்புணர்வு இன்றி காசு செலவு செய்து சில இடங்களில் புதுப்பிக்க அலைந்துவருவதாக கோவை மாநகராட்சி வார்டு 41-ன் மாமன்ற உறுப்பினர் சாந்தி கருத்து தெரிவித்தார்.
தற்போது தபால் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் போன்ற இடங்களில் ஆதார் தகவல் புதுப்பித்தல் தொடர்பாக முகாம்கள் நடைபெற்றாலும் 2 கம்ப்யூட்டர் அமைத்து முகாம் நடத்தினாலும் நாள் ஒன்றுக்கு 40 பேருக்கு மேல் தகவல்களை புதுப்பிக்க முடியாத சூழல் உள்ளது.
பரவலாக முகாம்கள் நடத்துக
இலவசமாக ஆதார் தகவல்களை புதுப்பிக்க இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளதால், மக்கள் மத்தியில் ஆதாரை இலவசமாக புதுப்பிப்பது தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், கோவை மாநகராட்சி இப்போது நடத்தக்கூடிய ' மக்களை தேடி மாநகராட்சி' போல மத்திய அரசு தரப்பில் தபால் துறை மூலம் கோவை மாநகரில் பரவலாக முகாம்கள் அமைத்து மக்களுக்கு ஆதாரை புதுப்பிக்க உதவவேண்டும் என மாமன்ற உறுப்பினர் சாந்தி இன்று கோரிக்கை விடுத்தார். இதை ஒரு கோரிக்கை மனுவாக, கோவை தபால் கோட்ட கண்காணிப்பாளரிடம் அவர் சமர்ப்பித்தார்.